ஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள். ஏழைகள், மிஸ்கீன்கள் அனாதைகளிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மீது அன்பு காட்டுங்கள். இவைகளெல்லாம் இஸ்லாம் கற்றுத்தரும் மிக உண்ணதமான பாடமாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழைகளிடம் அன்பு பாராட்டக் கூடியவர்களாக இருந்தார்கள். தனது வீட்டில் சமைக்கப்படும் ரொட்டியை தனக்கில்லையெனிலும், யாசகம் கேட்பவருக்கு கொடுத்தவிட்டு, தான் பசியுடன் உறங்குவார்கள். மார்க்கப்பற்றுள்ள ஏழை உலகப்பார்வையில் கேவலமானவனாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் கண்ணியமானவனாகும். செல்வந்தர்கள் ஏழைகளை உதாசினப்படுத்துகின்றனர்.
ஆனால் அந்த ஏழைகளின் ‘துஆ’(-பிரார்த்தனை)களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவன்றுள்ளார்கள். ‘தேவைகள் உடைய அதிகமான ஏழைகள்; இவர்களை செல்வந்தர்களின் வாசலில் இருந்து விரட்டப்படுகிறது. ஆனால் இவர்கள் இறைவனிடம் நேசத்திற்கு உரியவர்களாவார்கள். இவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிடிவாதமாக (இறைவனிடம் துஆ செய்து) அமர்ந்து விட்டால், அல்லாஹ் அவசியம் அதை நிறைவேற்றி வைக்கிறான்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)
எனவே ஒரு முஸ்லிம், ஏழை சகோதரனை கேவலமாக பார்க்காமல் இருப்பது அவசியமாகும். அவனை இழிவாக கருதவும் கூடாது. ஏனெனில் அவனின் அந்தஸ்து அல்லாஹ்விடம் எப்படி இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. வசதி படைத்தவர்கள் இழிவாக கருதுவதை சகித்துக் கொள்ளாமல் கவலையடைந்து, அவர்களுக்கு எதிராக பாதகமாக இறைவனிடம் கையேந்தி துஆ செய்து அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டால் நிலைமை மாறிவிடும். எனவே நம்மை பிறர் எவ்விதம் கண்ணியமாக பார்க்க வேண்டும் என எண்ணுகிறோமோ அவ்விதமே நாமும் அனைவரையும் கண்ணியக் கண்கொண்டு காண வேண்டும், அவன் ஏழையாக இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் சரியே.
ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஆயிஷாவே! எனது வாசலுக்கு வரும் எந்த ஏழையையும் வெறுங்கையுடன் ஒருபோதும் திருப்பி அனுப்பிவிடாதே, பேரித்தங்கனியின் ஒரு துண்டையாவது கொடுத்துவிடு. ஆயிஷாவே! ஏழைகளிடம் அன்பு காட்டு, அவர்களை இழிவாகக் கருதாதே, ஏழைகள் செல்வந்தர்களை விட முதலில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்’. (நூல்: திர்மிதீ)
இந்த ஹதீஸின் மூலம்; பொருள், செல்வம் வந்துவிட்டது என்ற மமதையில் இறைவனை மறந்து வாழ்வது மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். செல்வம் கிடைத்துவிட்டது என்பதால் ஏழை எளியவர்களை கேவலமாக, இழிவாக பார்ப்பதும் அவனை பெரும் சோதனையில் ஆக்கிவிடும். இந்த பொருளும், செல்வமும் இந்த உலகத்தோடு தங்கிவிடும். செல்வந்தனை விட ஏழை இறைவனுக்கு மிக நேசமானவனாக இருக்கிறான். எனவே செல்வந்தனை விட ஏழை சுவர்க்கத்திற்கு முந்திச் செல்வான்.
''திருமண - வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் விருந்தாகும்,'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
ஒரு ஏழையின் வீட்டில் நிக்காஹ் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அவர், தன் பக்கத்து வீட்டிலுள்ள செல்வந்தர் ஒருவரையும் தன் வீட்டு திருமணத்தில் பங்கேற்று, விருந்துண்டு செல்லுமாறு அழைக்கிறார். அந்த செல்வந்தர், ""இது ஏழை வீட்டு கல்யாணம் தானே, அங்கே நாம் ஏன் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன இருந்து விடப்போகிறது. மேலும், அங்கு சென்றால், தனக்கு அவமானமல்லவா ஏற்படும் என நினைக்க கூடாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருமுறை ஏழை ஒருவர், ஆட்டுக்கால் குழம்பை கொடுத்தார். அதை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். இதுபோல் செல்வந்தர்கள் வீட்டு விருந்துக்கும், ஏழைகள் அவசியம் அழைக்கப்பட வேண்டும்.
ஏழைகள் விடப்படும் வலிமா விருந்து கெட்ட விருந்து எனும்பொழுது அந்த விருந்து நல்ல விருந்தாக, இறையருள் பெற்ற விருந்தாக அமைய ஏழைகள் அவசியம் என்பதை செல்வந்தர்கள் உணரவேண்டும். ஒரு விஷயத்தை செல்வந்தர்கள் எண்ணிப்பார்த்தால் ஏழைகளின் மீது அவர்களுக்கு நிச்சயம் கருணை பிறக்கும். ஆம்! செல்வந்தர்களுக்கு ஏழை மிகப்பெரிய உதவியை செய்கிறார் என்பதை செல்வந்தர்கள் புரிந்து கொண்டார்களேயானால் அவர்களால் ஏழையை நேசிக்காமல் இருக்கவே முடியாது.
ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மம் காரணமாக அமைகிறகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த தர்மத்தைச் செல்வந்தர்கள் செய்வதற்கு இந்த ஏழைகள்தானே காரணியாக இருக்கின்றார்கள். ஏழை என்று ஒரு சாரார் இல்லையெனில் செல்வந்தன் எவரிடம் கொண்டுபோய் கொடுக்க முடியும்.
ஆக, ஏழை பணக்காரன் என்பதெல்லாம் இவ்வுலகைப்படைத்த அந்த ஏக வல்ல இறைவனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல்வந்தர்களைவிட தாழ்ந்தவர்களேயல்ல. இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் ஏழைகள் கஷ்டப்பட்டாலும் மறுமையில் கிடைக்கக்கூடிய இன்பங்களையும் சுகபோகங்களையும் செல்வந்தர்கள் அனுபவிப்பதற்கு முன்பே அதனை அடையக்கூடிய பாக்கியசாலிகள் என்பதை முன்னமேயே கண்டோம்.
அகிலத்தின் அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏழைகளை நேசிப்பதில் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று நமக்கு வரலாறு பறைச்சாற்றுவதை மனதில் கொள்வோம். ஏழைகளை கேவலமாக எண்ணாமல் அவர்களை மதிப்போம்.
சிந்திப்போம் சீர்பெறுவோம்.
M.A.முஹம்மது அலீ B.A.
ஏழைகளை இழிவாகக் கருதாதீர்! - வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்
பதிலளிநீக்குI just couldn't leave your website before suggesting that I actually enjoyed the usual info an individual provide on your visitors? Is gonna be back continuously in order to check up on new posts hotmail sign in email