
மாண்பு தரும் நோன்பு என்பர். அந்த மாண்பு என்றால் என்ன பொருள்? நோன்பு, அகஇருளை நீக்கும் அற்புதப் பயிற்சி! அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் பேரருளில் திளைக்கச் செய்யும் ஆன்மீகப் பயிற்சி!
எல்லாக் காரியங்களுக்கும் அந்தந்த காரியத்தை ஏவிய எஜமானன் இடத்தில் இருந்து கூலி – சன்மானம் பெறுவது உலக வழக்கம்.
ஆனால், நோன்புக்கு கூலி – சன்மானம், அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அடியானுக்கு நேரடியாக வருகிறது; அதன் மூலம் இறையருள் நேராக வந்து ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஆனந்தம் தருகிறது!
இன்னும் ஒருபடி மேலே சென்றால், அல்லாஹ் – எல்லாம் வல்ல இறைவன், தானே நோன்பு நோற்கும் அடியானுக்குச் சன்மானம் தருவதையும் தாண்டி, அந்த அல்லாஹ்வே அடியானுக்குச் சன்மானம் ஆகிறான் என்றால், இந்த நோன்பின் பெருஞ் சிறப்பை என்னவென்பது சொல்வது?
இதைத்தான் மனங்குடி கொண்ட குணங்குடி மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:
“எதையும் துறப்பது இதயம் திறப்பது சமாதி’’
இதனையே தமிழ்ச் சான்றோர், “ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலாத ஆனந்தம்’’ என்று வர்ணித்துள்ளார்.
ஆன்மீகப் பயிற்சியாக ஆனந்தம் தருவதோடு நோன்பின் மகிமை முடிந்து விடுகிறதா? என்றால் அப்படி இல்லை என்றே இஸ்லாம் கூறுகிறது!
“இஸ்லாம் என்பது வெறும் தத்துவம் அல்ல;
நடைபெறாத் தத்துவம் சாகுமே மெல்ல’’ – என்று ஒருநாட்டுக் கவிஞன் நயமாகப் பாடியிருக்கிறான்.
இஸ்லாம் கூறும் எதுவும் மனித வாழ்வின் அன்றாட நடைமுறைக்கு ஏற்றதாகவே இருக்கிறது. மனிதன் என்பவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அவனை இருக்க வழிகாட்டும் நெறிதான் இஸ்லாம்!
இஸ்லாம் என்னும் இந்த மானிட நேய நெறி, வெறும் சித்தாந்தமாகவோ, வறட்டுத் தத்துவமாகவோ, செயல்படுத்த முடியாத சிந்தனைக் குவியலாகவோ இருந்திருக்குமேயானால், ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு காலமாக, அகிலத்தை ஆட்சி செய்யும் அறநெறி கோட்பாடாக இருந்திருக்க முடியுமா?
இஸ்லாமிய மார்க்க மேதைகள், `இல்ம்’ என்னும் அரபி சொல்லுக்கு `அறிவு’ என்று விளக்கம் கூறுவர். இந்த அறிவு – இல்ம், வெறுமனே `இல்ம்’ ஆக இருந்து விட்டால், அதனால் என்ன பயன்? அந்த `இல்ம்’, `அமல்’ – நடைமுறை ஆக வேண்டும்; அப்பொழுதுதான், அந்த `இல்ம்’க்குப் பலன் ஏற்படும் என்று விரிவுரை செய்திருக்கிறார்கள்.
இதைப் போலவே, நோன்பும், வெறுமனே ஆன்மீகப் பயிற்சி என்பதோடு நின்றுவிடாமல், மானிட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு நேரிய சீரிய வழியைக் காட்டும் வாழ்க்கை நெறியாகவும் அமைந்திருக்கிறது.
இதனை ஐயன் வள்ளுவர் வாய்மொழியில் விளக்குவது பொருத்தம் எனலாம்:
“இலர், பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர், பலர் நோலா தவர்’’
உலகத்தில் வறியவர்கள் – ஏழை எளியவர்கள் பலர் உண்டாவதற்கு காரணம் என்னவெனில், நோன்பு நோற்பவர் சிலராகவும், நோன்பின் பெருமையை அறியாமல் நோன்பு நோற்காமல் இருப்போர் பலராகவும் இருப்பதுதான் என்பதை இந்தத் திருக்குறள் விளக்குகிறது.
நோன்பிருப்பவன், தன்னை வருத்திக் கொள்வான்; பிறருக்கு நோவினை செய்யான்.
நோன்பிருப்பவன், இன்னாச் சொல் பேசான்; எவரையும் வெறுத்து ஒதுக்க மாட்டான்; பொறாமை பொச்சாப்பு பொல்லாங்கு பேசல் போன்ற எதையும் தானும் செய்யான்; பிறரையும் செய்யாது தடுப்பான்.
இஸ்லாமிய வரலாற்றில் வரும் ஏற்றமிகு செய்தி இது! நோன்பு மாதத்தில்தான், ஒவ்வொரு நோன்பாளியும் தனது வருமானக் கணக்கைப் பார்க்கிறான்; செலவெல்லாம் போக, தன்னிடம் நூறு ரூபாய் எஞ்சி இருக்குமானால், அதில் இருந்து இரண்டரை ரூபாய் ஜக்காத் என்னும் ஏழை எளியோர்க்கான பங்கைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இஸ்லாமிய கொள்கையின்படி நடக்கும் அரசாங்கத்தில் ஜக்காத் தரக்கூடியவர்களிடமிருந்து வசூலித்து, ஜக்காத் பெறக் கூடியவர்களுக்கு முறையாக, திருக்குர்ஆன் கூறும் சட்டப்படி விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் இஸ்லாமிய சட்ட ஆட்சி இல்லை; ஆகவே, முஸ்லிம்கள், மஸ்ஜிது – பள்ளிவாசல்களை மையமாக் கொண்டு, இயல்பாக உருவாகியுள்ள மஹல்லா ஜமாஅத் என்னும் முஸ்லிம் சமுதாய கட்டமைப்புகளில் சமீப காலமாக `பைத்துல்மால்’கள் – சமுதாய நிதியகங்கள் உருவாக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு மஹல்லாவிலும் ஜக்காத் வசூலிக்கப்பட்டு, உரிய ஏழை எளியவர்களுக்கு ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் பங்கீடு’ செய்யப்படுகிறது.
இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சி ஏற்பட்ட, அந்தக் காலத்தில், ஜக்காத் தருவோரிடம் இருந்து ஜக்காத் பெறுவோர்க்கு சீராக கொடுக்கப்பட்டதன் காரணத்தால், சில காலங்களுக்கு பிறகு, தருவோர் இருந்தனர்; ஆனால், பெறுவோர் இல்லாமல் ஆகி விட்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் வியந்து விளக்கி இருக்கிறார்கள்.
இன்றைய உலகில் எழுநூறு கோடிக்கும் மேலாக மக்கள் தொகை இருக்கிறது. அவர்களின் இருநூறு கோடி பேர் முஸ்லிம்கள் என்றும், அவர்கள் நோன்பிருக்கிறார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
வள்ளுவர் வாய்ச் சொல்லில், `சிலர்’தான்நோற்கிறார்கள்; அதனால்தான் இல்லாத எளியவர்கள் உலகில் இன்னும் பலராக இருக்கிறார்கள். நோற்பாரும் பலர் ஆகி விட்டால், வறியவர்கள் இந்த வையத்தில் சிலராக சுருங்கி விடுவர்; காலப்போக்கில், இல்லாதவர்களே இல்லை என்ற அளவில் உலகில் சமுதாய மாற்றம் ஏற்பட்டு விடும்! இதற்குரிய புதிய வரலாற்று தோற்றத்தை இந்த `ரமளான் நோன்பு’ நிச்சயம் உருவாக்கும் என்று நம்புவோம்.
கே.எம்.கே.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.