.

.
3-11-15

தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன்
ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே
நிலவும் உறவுமுறையைப் பொறுத்தவரை
இந்தியாவின் மற்ற பாகங்களில் இருந்து தமிழகம்
வரலாற்றுபூர்வமாகவே வேறுபட்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 800
ஆண்டுகளாகச் சாதிகளுக்கு இடையே நடந்த
மோதல்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்
‘வலங்கை இடங்கை போராட்டங்கள்’ என்று
கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும்
பதிவாகியுள்ளன. ஆனால் இருவேறுபட்ட மதத்தைச்
சார்ந்தவர்கள் தங்களுக்குள் பகை கொண்டு
போராடினார்கள் என்ற தகவல்கள் மிகவும் குறைவு.
ஏன் அத்தகைய தகவல்கள் இல்லை என்றே
சொல்லிவிடலாம்.
தமிழக வரலாற்றில் இஸ்லாமியர்களைப் பற்றிய
குறிப்புக்கள் கி.பி.12-ம் நூற்றாண்டில் இருந்தே
பதிவாகியிருப்பதைக் காணமுடியும். 14-ம்
நூற்றாண்டில் தோன்றிய ‘பல்சந்தமாலை’ என்ற
சிற்றிலக்கியத்துடன் இஸ்லாமிய இலக்கியப்
பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறத்
தொடங்கின. அடுத்த வந்த
காலகட்டங்களில் பல்வேறு இஸ்லாமியப்
புலவர்கள் தங்களுடைய மதம் சார்ந்த
இலக்கியங்களை எழுத ஆரம்பித்தனர்.
‘சீறாப்புராண’த்தைப் பாடிய உமறுப் புலவரைத்
தமிழ் வரலாறு நன்கு அறியும்.
இந்து புராணங்களின் தாக்கம்
அதேநேரத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த மிகச்
சிறந்த புலவர்கள் பலர் இந்துமதம் சார்ந்த
புராணங்களில் இருந்தும் தங்களுக்கான
கதைப்பொருளை எடுத்து அற்புதமான
பாடல்களை இயற்றியுள்ளனர். அத்தகையவர்களில்
சையது முகமது அண்ணாவியார், கா.
பீர்காதறொலி ராவுத்தர், இளையான்குடி
ஸ்பெஷல் மேஜிஸ்திரேட்டும் சிவகங்கை தாலுகா
போர்டு உறுப்பினருமான எம்.கே.எம். அப்துல்காதிறு
ராவுத்தர், பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றவர்கள்
குறிப்பிடத் தக்கவர்கள்.
சையது முகமது அண்ணாவியார் பாடிய
மகாபாரத நூலின் பெயர் ‘சாந்தாதி
அசுவமகம்’. மகாபாரதத்தில் உள்ள 14-ம்
பருவத்துக் கதையை 4,104 பாடல்களில் இவர்
பாடியுள்ளார். பாரதப்போர் முடிந்தவுடன்
போரினால் ஏற்பட்ட மனக்கவலையை
ஆற்றிக்கொள்வதற்காக தருமன்
வியாசர் கூறியபடி அசுவமேதயாகம் செய்ததை
விவரிக்கும் பகுதி இது. சாந்தம் என்றால் அமைதி,
அசுவம் என்றால் குதிரை, மகம் என்றால் யாகம்.
எனவே இந்தப் பகுதிக்கு சாந்தாதி அசுவமகம்
என்று இவர் பெயரிட்டுள்ளார்.
இப்புலவரைப் பற்றி கலைமாமணி கவி
கா.மு.ஷெரீப் 1992-ல் சையது முகமது
அண்ணாவியார் நினைவுமலரில் எழுதியுள்ள ஒரு
பகுதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பில் மேற்கோள்
காட்டுகின்றனர். “நான் அரசியலில் இருந்தபோது
பேராவூரணிக்குக் கீழ்பால் உள்ள
கொன்றைக்காடு எனும் ஊருக்குச்
சென்றிருந்தேன். இரவு
பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஒரு விவசாயி
வீட்டின் முன்புறத்தில் படுத்திருந்தேன். 70 வயது உடைய
ஒருவர் வந்தார். தனக்குள்ள சாரீரவளம் கூட்டிப்
பாடிடலானார். அவர் பாடியது
மகாபாரத்தில் உள்ள கர்ணனைப் பற்றிய
நெடிய பாட்டு. “இது எந்தப் பாரதத்தில்
உள்ளது?” எனக் கேட்டேன். “அதிராம்பட்டினம்
அண்ணாவியார் பாடியது” என்றார்.
“தனிநூலா?” என்று கேட்டேன். “ஆமாம், கர்ணபருவம்
என்ற பெயரில் இப்பொழுது நான்
பாடிய அம்மானைப் பாடலை அவர்தான்
பாடியுள்ளார்” என்று பகர்ந்தார். அத்துடன்
அவர் நிற்கவில்லை. “எங்களின் (இந்துக்களின்) 18
புராணங்களையும் அம்மானை அம்மானையாக
அண்ணாவியார் எழுதியுள்ளாரே உங்களுக்குத்
தெரியாதா?” என்று கேட்டார். பாடியது
இப்போதுள்ள அண்ணாவியார் அல்ல. இவருடைய
பாட்டனார் (அவரும் இதே பெயர்
உடையவர்தான்) எழுதியது. இந்த
அண்ணாவியாருக்கே வயது 90-க்கு மேல். இவருடைய
பாட்டனார் காலம் 100 ஆண்டுகளையும்
தாண்டியது. அவ்வாறு இருந்தும் இன்றைக்கும்
கிராமங்களில் அவர் பாடல் பாடப்படுகிறது.
அந்த அண்ணாவியாரை ‘தெய்வம்’ என்று
குறிப்பிட்டார் அந்த முதியவர். இவர்
இந்துபுராணக் கதைகள் பலவற்றை அம்மானை என்ற
இசைப்பாடல் வடிவத்தில் பாடியிருப்பதாகத்
தகவல்கள் உண்டு. ஆயினும் இப்பொழுது
அச்சில் கிடைக்கும் நூல் ‘மகாபாரத அம்மானை’
என்ற ஒன்றுதான். இந்நூல் ரோஜா முத்தையா நூல்
நிலையத்தில் உள்ளது.
1904-ல் பாம்பன் பாலசுப்ரமணியசுவாமி கோவில்
குடமுழுக்கு நடந்ததைச் சிறப்பித்து எம்.கே.எம்.
அப்துல்காதிறு ராவுத்தர் பாடிய ‘பாம்பன்
பாலசுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக
வழிநடைச்சிந்து’ என்ற நூலைப் பற்றி மதுரை விவேகபாநு
பத்திராதிபர் எம்.ஆர்.கந்தசாமி கவிராயர்
புகழ்ந்து கூறியிருக்கிறார்.
கா. பீர்காதறொலி ராவுத்தர் 1868-ல்
திருவாசகத்தைப் பதிப்பித்தார். அப்பதிப்பில்
திருவாசகத்தின் முதல் பாடலாக உள்ள
சிவபுராணம் என்பது பல பிரதிகளில்
சிவபுராணத்து அகவல் என்று எழுதப்பட்டிருந்தது.
திருவாதவூரர் புராணத்திலும் அகவல் என்றே
இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுவது
பொருந்தாது என்பதை
யாப்பருங்கலவிருத்தி, தொல்காப்பியம்
போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ள பகுதியை மேற்கோளாகக்
காட்டிய பீர்காதறொலி ராவுத்தர்,
தொல்காப்பியச் சூத்திரப்படி இப்பாடல்
கலிவெண்பா என்று குறிப்பு எழுதினார்.
இந்தக் குறிப்பை பிற்காலத்தில் திருவாசகத்தைப்
பதிப்பித்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
கருவாட்டுக் கடை பாடம்
திருச்சியைச் சேர்ந்த முத்துவீரப்ப உபாத்தியாயரின்
மாணவர்கள் சுமார் 3 தலைமுறைகளாக
தொல்காப்பியத்தைப் படித்தும் படிப்பித்தும்
வந்தனர். அத்தகைய மாணவர்களில் குறிப்பிடத்
தக்கவர் 1908-ல் மறைந்த பிச்சை இப்ராஹிம் புலவர்.
இவருடைய மாணவர்தான் சிலப்பதிகாரம்,
மணிமேகலை போன்ற காப்பியங்களுக்குச் சிறந்த
உரைகளை வரைந்த பெரும்புலவர் நாவலர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.
திருச்சி நகரில் பெரிய கருவாட்டுக்கடை
முதலாளியாக இருந்த இப்ராஹிம் புலவர்,
பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாகம் கேட்டு
கொண்டதற்கு இணங்க அங்குள்ள
மாணவர்களுக்குத் தமிழ்க் கற்பித்து வந்தார்.
ரா. ராகவையங்கார் போன்ற பெரும்புலவர்களே
அவரது கருவாட்டுக் கடைக்கு வந்து பல
செய்திகளைக் கேட்டுக்கொண்டதாகவும்
அவ்வாறு வந்த புலவர்கள் பெரும்பான்மையோர்
சைவர்கள் ஆகையால் தங்களுடைய மூக்கைப்
பொத்திக்கொண்டு பாடம்
கேட்டனர் என்றும் என்னுடைய ஆசிரியர் பாவலர்
ச.பாலசுந்தரம் கூறியிருக்கிறார். (பேராசிரியர் ச.
பாலசுந்தரம் தொல்காப்பியம்
முழுமைக்கும் உரை எழுதி இருக்கிறார். இந்த உரையை
கோபாலய்யர் போன்ற பெரும்புலவர்கள்
பாராட்டி ஏற்றுக்கொண்டனர் என்பது
குறிப்பிடத் தக்கது).
அள்ளித் தந்த கொடையாளர்கள்
சங்க இலக்கியங்களில் ஒன்றான
குறுந்தொகை 1915-ம் வருடத்தில்
சவுரிபெருமாள் அரங்கனார் என்ற
பெரும்புலவரால் முதன்முதலாக
வெளியிடப்பட்டது. குறுந்தொகைக்குப்
பழைய உரை ஏதும் இல்லாததால் பதிப்பாசிரியரே
நூல் முழுமைக்கும் சிறந்த உரை எழுதியுள்ளார்.
அத்தருணத்தில் வெகு சிலர் தனக்கு உதவி
செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகையவர்களுள் அவர் பணிபுரிந்த கல்லூரியின்
முதல்வர் மஹம்மத் இப்ராஹிம் குரைஷி, குறிப்பிடத்
தக்கவர்.
தமிழ்மொழியில் வியாச பாரதத்தை
முழுமையாக மொழிபெயர்க்கச்
செய்து (சுமார் 10,000 பக்கத்தில்)
வெளியிட்டவர் ம.வீ.
இராமானுஜாசாரியார். இவர்
உ.வே.சாமிநாத அய்யருடன் கும்பகோணம்
கல்லூரியில் தமிழாசிரியராகப்
பணிபுரிந்துவந்தவர். 1903-லிருந்து 1933 வரை சுமார்
30 ஆண்டுகள் மகாபாரத
மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு அதனை முழு
மையாகச் செய்து முடித்தவர். அந்தக்
காலகட்டங்களில் மிகப்பலரிடம் அவர் உதவிகளைப்
பெற்றிருக்கிறார். அப்படி உதவி
செய்தவர்கள் பலரையும் அவர் நன்றியுடன் தன்
வனபர்வம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் இருவர் இஸ்லாமிய மதத்தைச்
சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் ஆடுதுறையைச் சேர்ந்த தோல்
வியாபாரி என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறு இஸ்லாமியர்கள் பலர்
தமிழ்மொழியின் பல்வேறு ஆக்கபூர்வமான
செயல்பாடுகளில் பல்வேறு காலங்களில்
தங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும்
நல்கியிருக்கிறார்கள். கடந்த கால தமிழ்நாட்டின்
வரலாற்றை முறையாகத் திருப்பி பார்ப்பவர்களுக்கு
இது தெளிவாகப் புலப்படும்.
பொ. வேல்சாமி, இலக்கியப்
பண்பாட்டு ஆய்வாளர், ‘கோவில் நிலம் சாதி’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
நன்றி:தி இந்து தமிழ
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.