24/9/16

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் சவுதி அரேபியா அரசின் மீது வழக்கு தொடர அனுமதி அளித்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க அதிபர் தனது வெட்டுரிமையால் (வீட்டோ அதிகாரம்) நிராகரித்தார்.

உலக வர்த்தக மையமான அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரத்தை 11-9-2002 அன்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களால் தாக்கினர். இச்சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா தீவிரவாத அமைப்புதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விளைவாக அந்த இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஒசாமா பின் பின்லேடனை பாகிஸ்தானில் உள்ள ஆபோட்டாபாத் நகருக்குள் புகுந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா இருந்ததாக பின்னர் நடைபெற்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

தாக்குதலுக்கு பயன்படுத்திய விமானங்களை கடத்திய 19 அல் கொய்தா தீவிரவாதிகளில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் என்பது ஆதாரத்துடன் நிரூபணமானது.

இந்நிலையில் இரட்டை கோபுர தாக்குதலில் 2996 பேர் உயிரிழந்ததற்கும் சுமார் 6 ஆயிரம் பேர் காயம் அடைந்ததற்கும் பல லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டதற்கும் சவுதி அரேபியா அரசின்மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என இந்த தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் சொத்துகளை பறிகொடுத்தவர்களின் வாரிசுகள் தீர்மானித்தனர்.

இதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான அதிகாரத்தை அமெரிக்க மக்களுக்கு அளிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட இந்த மசோதாவை அதிபர் ஒபாமா இன்று தனது வெட்டுரிமையால் (வீட்டோ அதிகாரம்) நிராகரித்தார்.The Justice Against Sponsors of Terrorism Act (JASTA) எனப்படும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நீதி என்னும் இந்த சட்டத்தை அனுமதித்தால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் பிறநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய சூழல் நேரிடும்.

மேலும் அமெரிக்கா நீண்டகாலமாக கடைபிடித்துவரும் பிறநாட்டின் இறையாண்மை தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கு தீமையாக அமைந்துவிடுவதுடன் கடல்கடந்துவாழும் அமெரிக்கர்கள் மீதும் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ள அதிபர் ஒபாமா இந்த சட்ட மசோதாவை நிராகரித்து கையொப்பமிட்டுள்ளார்.

இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் ஒரு வெளிநாட்டை சேர்ந்த அரசு இருந்துள்ளது என்பதை அறிந்து அதற்குரிய வகையில் செயலாற்ற இதைப்போன்ற சட்டம் சரியான வழிமுறையாக இருக்க முடியாது.இத்தகைய சட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவை எண்ணியும் உலகளவில் நாம் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் நமது நட்பு நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சியும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சட்டத்தை நிராகரித்துள்ளதாக அதிபர் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமாவின் இந்த முடிவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் ’சில வேளைகளில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் இருந்து அமெரிக்க உயரதிகாரிகளை காப்பாற்ற வாஷிங்டன் தூதரக ரீதியாக தலையிட வேண்டிவரும் என்பதால் இந்த சட்டம் தொடர்பாக நீண்டகாலமாக அதிபர் ஒபாமா கவலை கொண்டிருந்தார்.

இந்த முடிவை இன்று எடுத்துள்ள அதிபர் ஒபாமாதான் தீவிரவாதி ஒசாமா பின்லேடனை ஒழித்துக் கட்டினார். சில எதிர்க்கட்சியினர் எதிர்த்தபோதும் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருபவரும் இதே அதிபர் ஒபாமாதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த மசோதாவை புறக்கணித்துள்ள அதிபர் ஒபாமாவுக்கு குடியரசு கட்சி அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த சட்ட மசோதாவை ஒபாமா புறக்கணித்தது அவமானகரமான செயலாகும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் நான் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றால் உடனடியாக இதுபோன்ற சட்டத்தில் கையொப்பமிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.