21/9/16

கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான் எனும் உண்மையை அல்-குர்ஆன் எடுத்தியம்புவதை..... இக்கட்டுரைக்குள் தேடுங்கள்.

அல்லாஹ் தன்னந்தனியாக இருந்தான். தன்னுடைய சக்திகளை வெளிப்படுத்த வேண்டுமென நாடினான். தன்னைத்தான் அறிவதற்காக ஓர் அற்புதமான சிருஷ்டியை படைக்க நாடினான். தன் கற்பனையில் உருவானபடி மனிதனைப் படைத்தான். படைத்துத் தன் பிரதிநிதியாக, கலீஃபாவாக பூமியில் ஆக்கினான். 

ஆணைப் படைத்த இறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே, பெண்ணிடத்தில் ஒரு கவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான். ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆண்மையை விரும்புகிறாள்.

விரும்பி ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும் என்ற காரணத்தினால், ‘அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளைப் படைத்திருக்கிறான். அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன். பேத்திகளையும் உற்பத்தி செய்து, உங்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான்’ (ஸூரத்துன் நஹ்ல்: 72) என்று கூறுகிறான்.

உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைத்துள்ளான். நீங்கள் அவர்களிடம் மன அமைதியுறுவதற்காக உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான்.’ (ஸூரத்துர் ரூம்: 21)

‘எவர் இறைவனுக்காக (அவனின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு) திருமணம் முடித்தாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் அரசாங்கத்தின் கிரீடத்தை சூட்டுகிறான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவிக்கின்றார்கள். கிரீடம் சூட்டப்படும் இடம் எதுவாக இருக்கும் சுவனத்தைத்தவிர!

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
''நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).'' (அல்குர்ஆன்: ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70)
 
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவதில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், சுவையையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழ்வையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் முக்கிய மந்திரி.
உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (ஸூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன. 

மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது.

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
மேலும், அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (ஸூரா அல்-நஹ்ல் 16:72)
அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
 
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (ஸூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.

தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.
நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.
ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விஷயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
''உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்''.

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.

விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
இந்த வசனத்தை உண்மையாக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:
இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.

தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலாவாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் நிச்சயம் அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு. இந்த அறிய படிப்பினைகளை கடைப்பிடித்து வாழ்வோமானால் ஒவ்வொருவரும் தத்தம் பிரிய மனைவியோடு; கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் சுவர்க்கத்திற்குள் நுழைய இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான். மறவாதீர்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.

ஆகவே இவ்வுலகில் உங்கள் மனைவியுடன் இஸ்லாம் வகுத்துத்தந்த முறைப்படி இல்லறத்தை நல்லறமாக்கி வாழுங்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ''மனிதர்களில் சிறந்தவர் தன் மனைவியிடம் சிறந்தவரே'' எனும் அருள் மொழியை நினைவு கூறுங்கள். மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா? கஷ்டப்படாமல் சுவர்க்கம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா? சிறந்தவர்களாகத்தானே சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்! ஆகவே, கஷ்டப்பட்டேனும் நல்ல பெயர் எடுத்துவிடுங்கள், உங்கள் மனைவியிடம்! ஜோடியாக சுவர்க்கம் செல்ல அதுதான் சிறந்த வழி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

- அபூ ஸஃபிய்யாஹ்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.