.

.
2/5/16

சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் காரணிகளில் ஒன்று தனிமனிதர்களின் பேராசை. பொருளாதார வளர்ச்சியை எந்த வழியிலும் எட்ட நினைக்கும் மனிதர்களின் பார்வைக்கு மனிதர்கள்,  மற்ற விலங்குகள் என்ற 
வித்தியாசமில்லை.
சென்னையில் பால் அருந்திவரும் லட்சக்கணக்கான மக்கள்,  தாங்கள் விஷம் கலந்த பாலை அருந்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அருந்திவருகின்றனர் என அதிர்ச்சி தருகிறார் கால்நடை மருத்துவர் சுதாகர்.

எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளும் இங்கு உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் எளிதாக கிடைக்கும். நாள்தோறும் மக்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது இதன் காரணமாகத்தான்.  இந்த வரிசையில்,  மாடுகளிடமிருந்து அதிகளவு பாலை சுரக்க செய்வதற்காக கொடுக்கப்படும் ஹார்மோன் மருந்தால்,  மாடுகளுக்கும் அதன் பாலை அருந்தும் மக்களுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மாட்டிற்கு தரப்படும் ஆக்சிடோசின் என்ற அந்த மருந்து,  இந்தியாவில் பரவலாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பது என்பதும் கூடுதல் அதிர்ச்சி.

சென்னையில் மட்டும் 20,000 முதல் 25 ஆயிரம் மாடுகள் வரை இவ்வாறு ஆக்சிடோசின் கொடுத்து பால் கரக்கப்படுவதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர் சுதாகரிடம் பேசினோம்.
“ ஆக்சிடோசின் என்பது மாடுகளுக்கு பால் சுரப்பதற்காக, அதன் பால்சுரப்பிகளை ஊக்குவித்து பாலை சுரக்கச்செய்யும் ஒரு ஹார்மோன் மருந்து.
இந்த மருந்து, மாட்டின் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நேரடியாக பாலில் கலக்கும். தொடர்ந்து இந்த பாலை அருந்தும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு  உடல் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு பெண்குழந்தைகள் 8 லிருந்து 10 வயதுக்குள் பருவமடைவர். பெண்களின் உடலில், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து பல வருடங்கள் இந்த பாலை எடுத்துக்கொள்ளும் பெண்கள், மலட்டுத்தன்மை அடைந்து குழந்தைபெறும் தகுதியற்றவர்களாகிவிடுவதும், பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் என்ற நிலையை எட்டிவிடுவர் என்பதும் இதன் விபரீதமான விளைவுகள். இதனால் ஹார்மோன் ஊசி, மாடுகளுக்கு போட தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவசியமான நேரங்களில் தேவையை கருதி மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் இதை பயன்படுத்தலாம். 

ஆனால் இது,  சாதாரண தவிடு விற்கும் கடைகளில் கூட சர்வசாதாரணமாக கிடைக்கிறது. தவிடு வாங்குபவர்களுக்கு சலுகை விலையில் இந்த மருந்தை தருவதும் கூட சில இடங்களில் நடக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் தினந்தோறும் மாடுகளுக்கு  இந்த ஊசியை போடுவது சென்னையில் அதிகரித்திருக்கிறது. இந்த ஊசியை போட்ட 10 நிமிடத்தில் மாட்டிற்கு பால் சுரக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பேராசைக்கார மனிதர்கள் மாட்டின் கடைசி சொட்டுபால் வரை கறந்துவிடுகின்றனர்.

தொடர்ந்து பாலுக்காக இந்த ஊசியை மாட்டின் உரிமையாளர்களே போடுகின்றனர். முறையான பயிற்சியின்றி தினந்தோறும் அவர்கள் போடும் ஊசிகளால் மாட்டின் பின்பகுதி மரத்துப்போய், பின்னாளில் மாட்டிற்கு உடல்நலக்குறைவு வரும்போது அதற்காக ஊசிகள் போடும்போது, அதை மாட்டின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும்” என அதிர்ச்சி தந்தார்.


தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக மற்ற நகரங்களைவிட சென்னையில் பால்நுகர்வோருக்கு இயல்பாகவே பல சிக்கல்கள் உண்டு. கிராமங்களில் உள்ளதுபோல மாடுகளை உணர்வுப்பூர்வமாக இங்கு வளர்ப்பதில்லை. பெரும்பாலும் இங்கு வணிக நோக்கத்திலேயே வளர்க்கப்படுகின்றன.
இதனால் அவைகளுக்கான முறையான உணவுகள் தரப்படுவதில்லை. பொதுவாக மாடுகள் தவிடு, கடலை புண்ணாக்கு, வைக்கோல், புல் இவைகளையே உண்ணும். ஆனால் சென்னையில் மாடுகளுக்கு மலிவு விலை அரிசி உணவாக தரப்படுகிறது. மற்ற நேரங்களில் அதன் உணவு செலவை குறைப்பதற்காக மாடுகளை தெருக்களில் திரிய விடுகின்றனர்.


தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு பெரும்பாலும் உணவு சுவரொட்டிகள். சுவரொட்டியை உண்ணும்போது அதன் பின்புறம் உள்ள பசையையும் சேர்த்து உண்ணுகிறது. அதில் உள்ள வேதிப்பொருள் தொடர்ந்து மாட்டின் உடலில் சேகரமாகி, அது தரும்பால் விஷமாகும் அபாயம் உருவாகிறது. இந்த பாலை அருந்துபவர்கள் இதனால் பாதிக்கப்படுவர்.

அதுமட்டுமின்றி சமயங்களில் பிளாஸ்டிக் பைகளில் நாம் வீசும் மிச்சமான உணவை அப்படியே மாடுகள் உண்ணும். இதனால் அந்த மாடுகள் தரும் பால் விஷத்தன்மையாகி அதை உண்பவர்கள் பாதிப்புக்குள் ளாவார்கள். மாடுகளுக்கு இது குமுளேடிவ் (Cumulative) பாய்சன் என்பார்கள்.
 மாடுகளுக்கு இதன் பாதிப்பு உடனே தெரியாது. பிளாஸ்டிக் தொடர்ந்து உண்ணும் மாடுகள், பல வருடங்களுக்கு பிறகு ஒருநாள் திடீரென வயிறு உப்பி இறந்துவிடும். இறக்காமல் நோய்வாய்ப்படும் மாடுகள் பிழைக்க அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு.
ஆனால் வணிக நோக்கமுள்ள அதன் உரிமையாளர்கள், அறுவை சிகிச்சை செய்து மாடு பிழைக்கவில்லையென்றால் நட்டம் எனக்கருதி அந்த நிலையிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்றுவிடுவர்.ஆனால் கிராமங்களில் மாடுகளை உணர்வுப்பூர்வமான உறவாக கருதுவதால் அவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அழைத்துவருவர்” என்றார்.
இயற்கையான பாலையும் மனிதர்கள் தங்கள் பேராசையினால் நஞ்சாக்குவதால், எதிர்காலத்தில் நோயாளி சமுதாயத்தை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உணவுகளும் நஞ்சாகும் உச்சகட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளிம்பில் நிற்கிற மனித சமூகம், அதற்கான மாற்றை தேடவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் பிரதான உணவான பாலிலும் நஞ்சு என்ற நிலையில், நாம் குழந்தைகளுக்கு பாலை தவிர்த்து பாலில் உள்ள சத்துக்களைவிட அதிகம் கூடுதல் சத்துக்கள் கொண்ட கேழ்வரகு பால், சத்து மாவு கஞ்சி மற்றும் தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்ப்பால் போன்றவற்றை இனி தர முயற்சிக்கலாம். பெரியவர்களும் அவ்வாறே கருப்பட்டி காபி, மூலிகை தேனீர், என மாற்று உணவுகளை சிந்திக்கலாம்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>