விவசாயக் கடன், தொழில் தொடங்கக் கடன், வீடுகட்ட, வாகனம் வாங்கக் கடன், கல்விக் கடன், நகை அடகுவைத்துக் கடன், தனிநபர் கடன் எனக் கடன் தருவோர், வாங்குவோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இந்த நிலை சற்றே சிந்திக்கத்தக்கதாகும்.
கிடைக்கிறது என்பதற்காகக் கடன் வாங்குவது, அவசரத் தேவைக்காகக் கடன் வாங்குவது வங்கியில், நிதி நிறுவனங்களிடம், அரசிடம்,நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் என எந்தக் கடனாக இருந்தாலும், யாரிடம் வாங்கினாலும் கடன் கடன்தான்; வட்டியில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? இது ஆரோக்கிமான நிலைப்பாடுதானா, கடன் வாங்குதல் பெருமை சேர்க்குமா என்பது நமக்கு நாமே கேட்கவேண்டிய கேள்விகளாகும். கடன் வாங்கித்தான் செயல்களைச் செய்ய வேண்டுமாயின் நம் வாழ்வில் சரியான திட்டமிடலும், சேமிப்பும், வருவாய்க்குத் தகுந்த வாழ்வு வாழவும் முற்படவில்லை என்று தானே சொல்ல வேண்டும்?
இந்தக் கடன் வாங்கும் போக்கு பல்கிப் பெருகியுள்ளதற்குத் தகுதிக்கு மீறிய செலவினங்களும், ஆடம்பர, பகட்டு வாழ்க்கையும் ஒரு காரணம் எனலாம்.
கடன் தரும் அமைப்புகள் கடன் வாங்குபவர் தரும் வட்டியில் வாழ, வளரப் பெருமுயற்சியில் ஈடுபட்டுக் கவர்ச்சிகரமான “லோன் மேளா’க்களையும், கவர்ச்சிகரமான கடன் திட்டங்களையும் பெருமளவில் விளம்பரப்படுத்தி வருகின்றன.
இந்தப் போக்கு சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது.
நம் முன்னோர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கடன் வாங்குவதையே தன்மானக் குறைவாகக் கருதிவந்தனர். ஒவ்வொரு நாளும் கடன் இன்றித் தூங்க வேண்டும், இறக்கும் போது கூட கடன் இன்றி இறக்க வேண்டும் எனப் பெரிதும் விரும்பினர். சில அறிஞர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவே சொல்லிச் சென்றார்கள்.
ஷேக்ஸ்பியர் கடன் வாங்கவும் செய்யாதே, கடன் கொடுக்கவும் செய்யாதே, கடன் கொடுத்தால் பணமும் போய் நட்பும் போய் விட ஏதுவாகும் என்கிறார். மகாத்மா காந்தியடிகள் நான் வாழ்வில் செய்யாத காரியமும், காணப் பயந்த காரியமும் கடன் ஆகும் என்கிறார்.
பெரியார் சற்று அழுத்தமாக உன் தாய் இறந்து கிடந்து கடன் வாங்கித்தான் இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டுமாயின் உடலை நகராட்சியிடமோ, தொண்டு நிறுவனத்திடமோ ஒப்படைத்துவிடு. அந்த நிலையிலும் கடன் வாங்கி இறுதிச் சடங்குகளைச் செய்திடாதே என்றார். ராவணனின் மனக் கலக்கத்தைக் கடன் பட்டார் மனத்தோடு ஒப்பிட்டு, “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிறார் ஒரு கவிஞர்.
வீட்டில் பெண்கள் தன் கணவருக்குக் குறைந்த வருவாய் இருந்தாலும், அவர் வீட்டுச் செலவுக்கெனக் கொடுக்கும் பணத்தில் ஒரு சிறு தொகையை யாரும் அறியாவண்ணம் சேமித்து வைத்து விடுவார்கள். இதனைச் சிறுவாடு என்று சொல்வதுண்டு. குடும்பத்தில் அவரசத் தேவைக்கு யாரும் எதிர்பாராத வகையில் அந்தச் சிறுவாடு பணத்தை எடுத்துக் கொடுத்து உதவுவார்கள்.
பெரும்பான்மையோர் உழவுத்தொழில் செய்து வந்த நம் நாட்டில் நல்ல விளைச்சல் வரும் காலங்களில் அதனைத் தக்க முறையில் விளை பொருளாகவோ, பணமாகவோ சேமித்து வைத்து விளைச்சல் குறைந்த, அல்லது இல்லாத காலங்களில் அதனைப் பயன்படுத்தி வந்தனர்.
வீடு கட்டுதல், திருமண நிகழ்வுகள், கோயில் விழாக்கள், தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடுதல் போன்றவற்றிற்குக் கூடச் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்தும், விளைபொருள்களை விற்றும் செலவிட்டுக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவே செய்தனர்.
வங்கிகள் தாராளமாகக் கடன் கொடுக்கின்றன என்று தேவைக்கு அதிகமாக, மற்றவர்கள் வியந்து பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கடன் வாங்கிப் பெரிய வீட்டைக் கட்டி, கடனில் பெரிய காரையும் வாங்கி வீட்டின் முன்பு நிறுத்தி, கடன்காரனாகவே பல ஆண்டுகள் வீட்டில் வாழ்ந்து, காரில் பவனி வந்து வட்டியும் முதலும் சேர்த்து ஒரு பெருந்தொகையைக் கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து அல்லது தொழிலில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டு கடனைத் திரும்பக் கட்ட முடியாமல், தன்மானத்தை இழந்து தவித்துக் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டவர்களின் துயரச் செய்தியினை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம்.
மனிதனின் அவசியத் தேவைகள் மிகவும் குறைவு. ஆடம்பர பகட்டு வாழ்க்கையும், வருவாய்க்கு அதிகமான செலவினமும், கட்டுப்பாடில்லாத வாழ்க்கை முறையும், மது போன்ற தவறான பழக்கங்களுக்குப் பணத்தைச் செலவிட்டு அதனால் செயல்திறனும், ஆரோக்கியமும் குறைந்து குடும்பம் வறுமையிலும், கடனிலும் வாழ நேரிடுகிறது.
சிறு வயதிலிருந்தே சிக்கனத்தை வலியுறுத்திச் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வருவதும், கட்டுப்பாடான ஒழுக்கமான வாழ்க்கை முறையும், குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் குடும்பச் செலவுகளில் சிக்கனமாக இருக்கப் பழக்குவதுமே நம்மைக் கடன் இன்றிச் கெளரவமான நிறைவாழ்வு வாழச் செய்திடும்.
- இரா. இராஜாராம்
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.