"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/8/15

இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும் 
இஸ்லாமியப் பார்வையில் திருமணமென்பது மனதில் அமைதியையும் இதயத்தில் உறுதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

அது ஆண், பெண்ணிடையே அன்பையும், நேசத்தையும், கருணையையும் நிலைத்தோங்கச் செய்கிறது. இதன்மூலம் கணவன் மனைவிக்கிடையில் அன்பான, அமைதியான குடும்ப வாழ்வு ஏற்பட்டு ஒரு தூய்மையான இஸ்லாமிய சந்ததி உருவாக வழி பிறக்கிறது.

ஆண், பெண்ணிடையே அமைந்த இந்த இயற்கையான தொடர்பை மிக அழகிய முறையில் திருமறை குர்அன் வர்ணித்துக் காட்டுகிறது.

இருவருக்குமிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர அன்பையும் மன அமதியையும் திருமண உறவு ஏற்படுத்துகிறது என்று அருள்மறை கூறுகிறது.

(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)

திருமணம் என்பது இருவரிடையே ஏற்படும் ஒரு பலமான உறவாகும். இவ்வுறவின் மூலமாக ஆண், பெண்ணை அல்லாஹ் உறுதியுடன் ஒன்றிணைக்கிறான். கருணையும், அன்பும், பாசமும் நிறைந்த இந்த இல்லறத்தில் இவ்விருவரும் முழுமையான நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்.

இஸ்லாமிய பார்வையில் நற்குணமுள்ள மனைவி இவ்வுலக வாழ்வில் இனிமை சேர்ப்பவளாகவும் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகவும் இருக்கிறாள். ஏனெனில், வாழ்வில் துன்பத்தையும் சோதனைகளையும் சந்திக்கும் கணவன் இல்லம் திரும்பும்போது அவளிடம் நிம்மதியையும் மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அடைகிறான். இம்மகிழ்ச்சிக்கு இணையாக உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று எவ்வளவு உண்மையானது! 'உலகம் அனத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.' (ஸஹீஹ் முஸ்லிம்)
இதுதான் தொலைநோக்குப் பார்வை கொண்ட இஸ்லாமின் திருமணம் பற்றிய உயர்ந்த கண்ணோட்டமாகும். பெண்மையின் மாண்பை இஸ்லாம் இவ்வாறே உயர்த்திக் காட்டுகிறது.

பெண் மற்றும் திருமணம் குறித்த இஸ்லாமின் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் முஸ்லிமை இக்காலத்தில் வெளிப்பகட்டு அலங்காரங்களைக் கொண்ட இளம் பெண்கள் கவர்ந்திட முடியாது. மாறாக, மார்க்கப் பற்றுள்ள பெண்கள்தான் அவரை ஈர்க்க முடியும். தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் நிதானத்துடன், நிம்மதியான மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வுக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய நற்பண்புகளைப் பெற்ற பெண்ணையே தேர்ந்தெடுப்பார். 

தான்தோன்றித்தனமான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சியையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். இதற்கெல்லாம் மேலாக மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, நன்னடத்தை உடையவளையே அவர் விரும்புவார். இது விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்: 'நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்ப பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப் பற்றுக்காக. மார்க்கப் பற்றுடையவளை (மணந்து) வெற்றி அடந்துகொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு மார்க்கப் பேணுதல் உடைய பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உபதேசித்தது, அழகான பெண்ணை விரும்பக்கூடாது ஏன்ற கருத்தில் அல்ல. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணத்துக்கு முன் அப்பெண்ணை பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கது என்றார்கள். முஸ்லிம் தனது மனதுக்குப் பிடிக்காத, அவனது கண்களுக்கு மகிழ்ச்சியளிக்காத பெண்ணை மணந்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது ஏன்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள்.
முகீரா இப்னு ஷுஃபா  ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் காலத்தில் நான் திருமணம் செய்ய பெண் பேசினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அந்தப் பெண்ணைப் பார்த்தீரா' ஏன்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவளைப் பார்த்துக்கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறந்ததாகும்' என்று கூறினார்கள். (ஸன்னனுன் நஸப்யீ)அன்சாரிப் பெண்ணை பெண் பேசியிருந்த ஒருவர் நபி     ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் அப்பெண்ணைப் பார்த்தாயா என்று கேட்டார்கள். அவர் இல்லை ஏன்றார். அப்பெண்ணை பார்த்துக்கொள் என அவரை ஏவினார்கள். (ஸுனனுன் நஸப்யீ)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நற்குணமுடைய பெண்ணிடம் அழகும் விரும்பத்தகுந்த பண்புகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்பது கருத்தல்ல. இதனால்தான்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்: 'மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதில் மிகச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நற்குணமுடைய பெண். கணவன் அவளைப் பார்த்தால் அவனை மகிழ்விப்பாள். அவன் ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவன் இல்லையென்றால் அவனை பாதுகாத்துக் கொள்வாள். (இவ்விடத்தில் மனைவி தனது கற்பை பாதுகாப்பதை கணவனை பாதுகாப்பதென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்). (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். 'பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
இது கணவனுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தன்மைகொண்ட மனைவி பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய உயர்ந்த கண்ணோட்டமாகும். இத்தகைய பெண்ணே இல்லறத்தின் சிரமங்களை சகித்துக் கொள்வாள். இல்லத்தில் திருப்தி, அமைதி மற்றும் உற்சாகத்தை உஊற்றெடுக்கச் செய்வாள். சந்ததியை சிறந்த முறையில் பேணிக் கொள்வாள். வீரமிக்க மக்களாகவும் சிறந்த அறிஞர்களாகவும் அவர்களை உருவாக்குவாள்.
மனம், உடல், ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அஸ்திவாரத்தின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்ணயிக்கப்பட வேண்டுமென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதுதான் திருமண உறவு உறுதியாக அமைந்து வெறுப்புணர்வும் மனஸ்தாபமும் தலைதூக்காதிருக்கும். உண்மையான முஸ்லிம் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றுவார். அவர் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார். மணவாழ்வில் இஸ்லாமிய வழிகாட்டுதலை பின்பற்றுவார்
உண்மை முஸ்லிம் தனது இல்லறத்தில் மனைவியுடனான உறவுகளைப் பேணுவதில் இஸ்லாமிய நெறியை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்தும், அவளுடனான நல்லுறவு குறித்தும் இஸ்லாமிய வழிகாட்டுதலை நாம் அறியும்போது ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம்.
இஸ்லாம் பெண்ணைப்பற்றி நிறைய உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதோ பெண்களைப் பற்றி அருட்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய உபதேசங்களில் சில பின்வருமாறு:
பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.' - ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம
ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹுல் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'பெண், விலா எலும்பைப் போன்றவள், அவளை நீ நிமிர்த்த நினைத்தால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய்.'
ஸஹீஹ் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 'பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய். அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்துவிடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை தலாக் விடுவதாகும்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கையான தன்மைகளை, பண்புகளை மிகத் துல்லியமாக விவரித்துள்ளார்கள். கணவன் விரும்புவது போன்று மனைவி ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகள் இயல்பாகவே அமந்திருக்கும் என்பதை கணவன் விளங்கிக்கொள்ள வேண்டும். பூரணமானது, சரியானது என தான் நினைக்கும் பாதையின்பால் அவளைத் திருப்புவதில் வன்மையான முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அவளை அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
அவளது சில குணங்கள் தனது விருப்பத்திற்கேற்ப இருக்காது. இதனால் தான் விரும்புவதுபோல அவளை மாற்றிட வேண்டுமென நினைப்பது தனது விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக்கூடாது; அவற்றை நேராக்கியே தீருவேன் என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல்பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே கணவன் மனைவியை தான் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் தலாக்கில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
பெண்ணின் இயற்கையை ஆழமாக விளங்கி விவரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை உள்ளத்தில் கொண்டுள்ள உண்மை முஸ்லிம் தனது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களை பொருட்படுத்த மாட்டார். அப்போதுதான் இல்லம் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இல்லாத நிம்மதியளிக்கும் அமைதிப் பூங்காவாகத் திகழும்.இந்த நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒர் அம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும். 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்துவிட்டு பிறகு அவளது இயல்புகளை விவரித்தபின், ஆரம்பித்த அதே வார்த்தையைக் கூறிமுடிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்! அவளது இயல்பைப் பற்றி எவ்வளவு ஆழிய சிந்தனை! எல்லா நிலைகளிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை முன்மாதிரியாக அமைத்துக் கொள்வதைத்தவிர முஸ்லிமுக்கு வேறு எதேனும் வழியுண்டோ!
பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தனது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த நபிமொழியின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். 'அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக்கொள்ள முடியாது, அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர. அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கிவையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள்.
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.' (ஸுனனுத் திர்மிதி)
இந்த உபதேசத்தை கேட்கும் உண்மை முஸ்லிம் நிச்சயமாக மனைவியின்மீது விதியாகும் கடமைகளை நிர்ணயிப்பதிலும் மனைவியுடன் கருணையாக நடந்துகொள்வதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வார். அதனால் முஸ்லிமின் இல்லறத்தில் மனைவிக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான அல்லது இடையூறு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது. பெண்ணைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபதேசங்கள் எண்ணற்றவை. அதில் 'தனது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்துகொள்பவரே உம்மத்தில் சிறந்தவர்' என வர்ணிக்கப்பட்டுள்ளது.நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.' ((ஸுனனுத் திர்மிதி)
இந்த நபிமொழியின் கருத்து: பரிபூரண ஈமான் உள்ளவர் மிக அழகிய குணத்தை கொண்டிருக்க வேண்டும். அழகிய குணமில்லாமல் பரிபூரண ஈமானை அடைய முடியாது. நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர் தன் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும். நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்.
சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களுக்கு கேட்கும் விதமாக பின்வருமாறு கூறினார்கள்: 'முஹம்மதின் குடும்பத்தாரிடம் பல பெண்கள் தங்களது கணவர்களைப்பற்றி முறையிட வருகிறார்கள். அக்கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்.' (ஸுனனு அபூதாவுத்)
நேரிய மார்க்கமான இஸ்லாம் பெண்ணுக்கு நீதி செலுத்தி அவளைக் கண்ணியப்படுத்துவதில் மேலோங்கி நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் அழகிய முறையிலேயே நடந்துகொள்ள உபதேசிக்கிறது. பெண்மையின் வரலாற்றில் வேறெங்கும் இக்கண்ணியத்தை அடந்துகொள்ள முடியாது.
உ..மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! எனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)
இத்திருவசனம் முஸ்லிமின் உள்ளுணர்வை தட்டியெழுப்புகிறது; அவரது கோபத்தை தணிக்கிறது; அவள் மீதான வெறுப்பை அகற்றுகிறது. இதன்மூலம் திருமண உறவு அறுந்துவிடாமல் பலப்படுத்தப்படுகிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் இத்தூய்மையான திருமண உறவில் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுறது.
தன் மனைவியை வெறுப்பதால் அவளை தலாக் கூறப்போவதாக தெரிவித்த மனிதருக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நீ நாசமடைவாயாக! இல்லறம் அன்பின் மீதுதான் அமைக்கப்படுகிறது. அதில் பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்' என்று கூறினார்கள்.
இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையை தனித்துக்கொள்வதற்குண்டான வழியோ அல்ல. மாறாக இதற்கெல்லாம் மேலாக தூய்மை யானதும் மிக கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அப்பண்புகள் தனது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களை சகித்துக்கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும்.
இந்நிலையில் அவரிடம் மிருகத்தனமான செயல்பாடோ, வியாபாரியின் பேராசையோ, வீணர்களின் பொடுபோக்கோ வெளிப்படாது. மாறாக, உண்மை முஸ்லிம் தனது இரட்சகனின் வழிகாட்டுதலையே பின்பற்றுவார். மனைவி மீது வெறுப்பிருந்தாலும் நல்லுறவையே கடைபிடிப்பார். தனது இறைவனின் கூற்றுக்கிணங்க தன்னை அமைத்துக் கொள்வார். ஏனெனில், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால் உண்மையில் அவை நலவுகளால் சூழப்பட்டதாகவும், நன்மைகளை உள்ளடக்கியதாகவும் அமந்திருக்கும்.
எனவே உண்மை முஸ்லிம், எவ்வாறு நேசிக்க வேண்டும் எவ்வாறு வெறுக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நிதானமான, நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.
முஸ்லிமான பெண்ணை அவளது கணவன் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே அக்கணவன் தன்னை திருப்திபடுத்தும் நற்குணங்களை மறந்துவிடக்கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தகுந்த குணங்களை சுட்டிக்காட்டவும் தவறக்கூடாது என்பதை மகத்தான இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.' (ஸஹீஹ் முஸ்லிம்)
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.