.

.
24/11/16


 உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் உடல் பருமன் மற்றும் இதய நோய்கள். இந்நோய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் செயற்கை ஜூஸ் வகைகளால் தான் என்று உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலே சொன்ன நோய் வகைகளால் ஏற்படும் மரணங்களுக்கு 80% சர்க்கரை கலந்த பானங்களால் தான் காரணியாக இருக்கின்றனவாம்.

6.6 கோடி சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. கூடிய விரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா மாறும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு எச்சரிக்கை மணியையும் இவ்வகை நோய்களை கட்டுப்படுத்தும் சில ஆலோசனைகளையும் உலக சுகாதார மையம் முன்வைத்துள்ளது.

ஏன் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது? காராணம் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஓரு நாள் எனர்ஜி தேவைக்கு சராசரியாக 25 கிராம் சர்க்கரை போதுமானது. ஆனால் 250 மில்லி லிட்டர் கொண்ட ஒரு குளிர்பானத்தில் 28 முதல் 32 கிராம் வரை சர்க்கரை அளவு உள்ளது.

நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குளிர்பானங்கள் மற்றும் செயற்கை ஜூஸ் வகைகளை  தொடர்ந்து அருந்தி வருவோருக்கு சர்க்கரை நோய் வர 26% அதிக வாய்ப்பு உள்ளதாக WHO ஆய்வில் கூறப்படுகிறது. நாம் தினமும் வெவ்வேறு உணவுகள் மூலம் நம் உடலுக்குள் சர்க்கரையை ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.

பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது. சர்க்கரை இருந்தாலும் உணவு மற்றும் பழங்களில் உள்ள மற்ற சத்துக்களும் உடலுக்கு தேவை. எனவே அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் குளிர்பானங்களால் தான் நம் உடலுக்கு எனர்ஜி ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை அருந்துவதால் தேவையற்ற அளவு சர்க்கரை நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது.

உணவுகளால் உடலில் இருக்கும் சர்க்கரை அளவே உடலுக்கு போதுமானது. நாம் அதோடு குளிர்பானங்களால் கிடைக்கும் சர்க்கரையையும் உடலுக்குள் அனுமதிக்கும்போது விளைவு கூடிய விரைவில் சர்க்கரை நோயாக வெளிவரும்.முதல் நடவடிக்கையாக குளிர்பான பொருட்கள் மீது கைவைக்கச் சொல்கிறது WHO. குளிர் மற்றும் மென்பானங்கள் மீது தற்போதுள்ள வரியை விட 20% கூடுதல் வரியை சுமத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதனால் மக்கள் குளிர்பானங்கள் பருகும் அளவு 20% வரை குறையும் என்கிறது WHO. இது பொத்தாம் பொதுவான அறிவிப்பு இல்லை. இதற்கு முன் இத்திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. விற்பனை 20% வரை குறைந்திருப்பதையும் கண்கூடாக தெரியவந்துள்ளது.2012-ம் ஆண்டு உலகில் அதிக அளவில் சர்க்கரை கலந்த பேக்கேஜ் பானங்களை அதிகம் குடிக்கும் நாடாக இருந்தது மெக்ஸிக்கோ.

இதனால் மக்களிடம் ஏற்படும் உடல் பாதிப்புகளை கவனித்த அந்நாட்டு அரசு கூடுதலாக வரி விதிக்க முடிவெடுத்தது. 2014-ம் ஆண்டு 18% வரி விதிக்கப்பட்டது. விளைவு 2014 டிசம்பர் கணக்குபடி 18% குளிர்பான விற்பனை சரிந்தது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் 9% வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒரு பொருளின் விலை உயரும்போது மிடில் கிளாஸ் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட மக்கள் அதை வாங்குவதை தவிர்க்கின்றனர் என்பது இந்த ஆய்வில் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும் அளவில் மிடில் கிளாஸ் மற்றும் குறைந்த வருவாய் மக்களைக் கொண்ட இந்தியாவில் கூடுதல் வரி விதிப்பு நிச்சயம் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பலாம். 20% வரி விதிப்பு பின்பற்றப்பட்டால் சுமார் 4 லட்சம் பேரை சர்க்கரை நோயில் இருந்து காப்பாற்ற முடியும் என்கிறது WHO.மெக்ஸிக்கோவின் வெற்றி ஒரு புறம் இருந்தாலும் எகிப்தின் கதையையும் நாம் கவனிக்க வேண்டும்.

 அந்நாட்டில் உடல் ஆரோக்கியத்துக்கு கேடான நொறுக்குத் தீனிகளுக்கும் குளிர்பானங்களுக்கும் கூடுதல் வரி விதிக்க அரசு முயன்றது. ஆனால் அங்கு வலுவாக இருக்கும் சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும் குளிர்பான நிறுவனங்களின் லாபியால் அரசு வரி விதிப்பை உயர்த்த முடியவில்லை. மாறாக அதுபோன்ற பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. லாபத்தை மட்டுமே இலக்காக கொண்ட நிறுவனங்களின் ஆணைக்கு கட்டுப்படாத அரசால் தான் இதை நிறைவேற்ற முடியும்.

இந்தியாவை பொறுத்த வரையில் தற்போது 21% வரை குளிர்பானங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. கூடிய விரைவில் ஜி.எஸ்.டி திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு 5% 12% 18% 28% என நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது. 28% வரி விதிப்பின் கீழ் குளிர்பான வகைகளைக் கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் சிகரெட் குளிர்பானங்கள் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி சுமத்தவும் அரசு யோசித்து வருகிறது.

ஆக 28 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குளிர்பானங்கள் மீதான வரி விதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் மீது கூடுதலாக 20% வரி விதிக்க WHO அமைப்பு பரிந்துரைத்துள்ளது நிச்சயம் குளிர்பானங்களின் விலையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கும் என்று நாம் நம்பலாம்.இது மட்டும் போதாது ஒருபுறம் வரியை அதிகரிப்பதோடு மறுபுறம் பழம் காய்கறி போன்ற ஆரோக்கியமான அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் மக்கள் ஆரோக்கியமான உணவு பொருட்கள் மீது ஆர்வம் செலுத்தவார்கள் என்கிறது அந்த அமைப்பு.தாமிரபரணியில் கோக்க கோலா நிறுவனம் தண்ணீர் எடுப்பதற்கு உயிர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இந்த தடைக்கும் இந்த தடயை நிரந்திரமாக்கவும் விவசாயிகளும் பொதுநல ஆர்வளர்களும் போராடி வருகின்றன. அது சூழலியல் பிரச்னை திருநெல்வேலியில் இருக்கும் மக்களுக்கு மட்டும் தான் பாதிப்பு என்று நாம் நினைத்தால் அடைக்கப்பட்ட பாட்டில்களில் எமன் நம்மை தேடி வருவான். சுற்றுச் சூழல் பாதிப்பு மட்டும் அல்ல இவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு தான். அந்தவகையில் பார்த்தால் நமக்கும் போராட ஒரு காரணம் உள்ளது. போராட வேண்டிய பொறுப்பும் உள்ளது.

இந்த விவகாரத்தில் உலக அமைப்புகளோ இந்திய அரசோ எந்தவித நடவடிக்கைகளை எடுத்தாலும் அது மக்களின் ஆதரவு இன்றி வெற்றி பெறாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் இது நம் ஆரோக்கியத்தை காப்பாற்றிக் கொள்ள அடிக்கப்படும் எச்சரிக்கை மணி
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.