"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/11/16

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் தேட வேண்டிய கேள்விகளுள் முக்கிய கேள்விகளுள் ஒன்று, ஏன் திருமணம் செய்ய வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில்களைத் திரட்டினால் அவற்றில் சந்தோஷம் சம்பந்தப்பட்டவைகளும், பயம் சம்பந்தப்பட்டவைகளும் இருக்கின்றன. நீங்கள் ஏன் திருமணம் செய்யப் போகிறீர்கள்? என்ற கேள்வியை இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் முன்வைக்கின்ற போது, அவர்களால் அதிகமாக அளிக்கப்படுகின்ற பதில்களுக்கான சில மாதிரிகளைக் கீழே தருகின்றோம். முதலில் இளைஞர்களது மாதிரிப் பதில்கள்...

1. எனது பாலியல் ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக.
2. என்னைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு பெண் தேவை.
3. எல்லோரும் திருமணம் செய்கிறார்கள். நானும் செய்யத்தானே வேண்டும்?
4. இப்போது திருமண வயது வந்துவிட்டது.
5. ஒரு பெண்ணை விரும்புகிறேன்.
6. எனது பெற்றோர்கள் திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகிறார்கள்.
7. பெற்றோரையும், தம்பிமார்களையும், தங்கச்சிமார்களையும் கவனித்துக் கொள்ள ஒருவருமில்லை.
8. ஆபாச உலகிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக.
9. அல்லாஹ் கூறியுள்ள அன்பையும் அமைதியையும் அருளையும் அடைந்து கொள்வதற்காக.
10. திருமணம் நபியவர்களது சுன்னா.
11. ஒரு இஸ்லாமிய வீட்டை உருவாக்குவது எனது கடமை.
12. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காக.
13. குடும்பத்தை சுமத்தலும், பிள்ளை வளர்ப்பும் உண்மையான ஆண்மையின் வெளிப்பாடுகள்.
14. நல்ல வசதியான ஒரு இடத்தில் முடித்தால், வசதியாக வாழ்ந்து விடலாம்.
15. வாழ்க்கையில் ஒரு மாற்றத்திற்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

இங்கு கூறப்பட்டுள்ளவை சில உதாரணங்கள் மாத்திரமே. இவற்றில் சில சிலரது மனதுக்கு நெருக்கமானவையாக இருக்கலாம். மற்றும் சில தூரமானவையாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் பல்வேறுபட்ட மன உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபளிக்கக்கூடியவையே. இவற்றில் எதனையும் நாம் ஹராம் என்று சொல்ல முடியாது. அனைத்தும் இயல்பான, அனுமதிக்கப்பட்ட மனித எதிர்பார்ப்புகளாகும். ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தல் அவசியமாகிறது. அடிப்படையானவை எவை? கிளையானவை எவை? முதல்நிலைப்படுத்த வேண்டியவை எவை? இரண்டாம் தரமானவை எவை? என்ற வேறுபடுத்தல் அவசியம்.

இந்த வேறுபடுத்தல் அல்லது ஒழுங்குபடுத்தல் இல்லாது போகின்ற பொழுதுதான் வாழ்க்கை போக வேண்டிய பயணத்திலிருந்து திசைமாறிச் செல்வதற்கான சூழல் ஏற்படுகின்றது, அல்லது இடை நடுவே நின்று விடும் நிலை தோன்றுகின்றது. எனவே இங்கு எதிர்பார்ப்புக்களை ஒழுங்குபடுத்துதல் குறித்து, அடுத்ததாகக் கொஞ்சம் கவனத்தைச் செலுத்துவது மிகவும் பொறுத்தமானதாக அமையும் என நினைக்கிறோம். 

முதலில், நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்பது, ஒரு எதிர்வினையாக மாத்திரம் அமையக் கூடாது. பெற்றோரின் வற்புறுத்தல், தம்பி தங்கைகளைக் கவனிக்க அல்லது பெற்றோரைக் கவனிக்க அல்லது என்னைக் கவனித்துக் கொள்ள ஆள் தேவை, எல்லோரும் திருமணம் செய்கிறார்கள், எனக்கு திருமண வயது வந்துவிட்டது போன்ற வகையான நியாயங்கள் ஒருவித எதிர்வினைப் பண்பைப் பிரதிபளிக்கின்றன.

இவை ஒரு போதும் நான் ஏன் திருமணம் செய்கிறேன் என்பதற்கான அடிப்படை நியாயங்களாக இருக்க முடியாதவை. இவற்றின் அடியாக மாத்திரம் ஒரு குடும்பம் எழுவது ஆபத்தானது. அந்தக் குடும்பத்தின் நிலைத்த தன்மைக்கான உத்தரவாதம் அங்கு இல்லாது போகின்றது. அடுத்து, நாம் ஏன் திருமணம் செய்யப் போகிறோம் என்பது, ஒரு முதிர்ச்சியற்ற மனவெழுச்சியாக அல்லது ஒரு உல்லாசத் தேடலாக மாத்திரம் அமைந்து விடவும் கூடாது. 

ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்பதும், ஒரு மாற்றம் தேவை என்பதும், வசதியான வாழ்வு தேவை என்பதும், பாலியல் ஆசை என்பதும் இந்த வகை சார்ந்தவைகளாகும். இந்த விடயங்களும் ஒருவன் திருமணம் செய்வதற்கான அடிப்படை நியாயங்களாக இருக்க முடியாதவை.

ஒரு குடும்பம் இவற்றின் மீது மாத்திரம் எழுந்து நிற்க முடியாது. மாற்றமாக, நாம் ஏன் திருமணம் செய்யப் போகிறோம் என்பது, அது ஒரு இபாதத், வணக்கம், நன்மை தருகின்ற ஒரு செயற்பாடு என்ற புரிதலின் மீது அமைய வேண்டும். நபியவர்களது சுன்னா என்பதும், அல்லாஹ்வின் திருப்தி என்பதும், தனது கற்பைக் காத்துக் கொள்ளுதல் என்பதும், அன்பையும் அருளையும் அமைதியையும் அடைந்து கொள்ளுதல் என்பதும், திருமணத்தை ஒரு வணக்கமாகப் புரிந்து கொண்ட நியாயங்கள், நாம் ஏன் திருமணம் செய்கிறோம் என்பதற்கான அடிப்படையான நியாயங்கள். 

குடும்ப வாழ்வு இவற்றின் மீது எழுந்து நிற்கின்ற பொழுது, அது தூய்மையானதாக இருக்கும். நிம்மதி நிறைந்ததாக இருக்கும். செழிப்பானதாக இருக்கும். அடுத்து, நாம் ஏன் திருமணம் செய்யப் போகிறோம் என்பது, அது ஒரு பொறுப்பு, கடமை, மனித இனத்தின் நிலைத்த தன்மைக்கான எனது பணி என்ற புரிதலின் மீது அமைதல் வேண்டும்.

இஸ்லாமிய வீடு என்பதும், குடும்பப் பொறுப்பு, பிள்ளை வளர்ப்பு என்பதும், அன்பும் அருளும், அமைதியும் என்பதும், ஆபாசத்திலிருந்து காத்துக்கொள்ளுதல் என்பதும் இந்தவகை சார்ந்த நியாயங்களாகும். இவற்றின் மீது எழுகின்ற ஒரு குடும்பம் நீடித்து நிலைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். இஸ்லாம் குடும்ப வாழ்வு குறித்துப் பேசுகின்ற பொழுது அதனை ஒரு இபாதத்தாகவும், ஒரு பொறுப்பாகவும், ஒரு சமூகப் பாதுகாப்பாகவும் அடையாளப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
இவை குடும்ப வாழ்வு குறித்த மிக முக்கிய பெறுமானங்களாகும். இந்தப் பெறுமானங்களைப் பிரதிபளிக்கக்கூடிய நியாயங்களே அடிப்படையான நியாயங்களாகக் கருதப்படும். 

இதனால்தான் அல்குர்ஆன் திருமண ஒப்பந்தத்தை “ஒரு கனதியான ஒப்பந்தம்” என்று சொல்கின்றது. (அல்குர்ஆன்- ஸூரத்துன்நிஸா – 21) இங்கு கனதியான ஒப்பந்தம் என்பதன் பொருள், அது குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றிற்கான ஒப்பந்தம், அது சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒப்பந்தம், அது அல்லாஹ்விடத்தில் வகை கூறுவதற்கான ஒப்பந்தம். ஆகவே, சகோதரர்களே, நீங்கள் ஏன் திருமணம் செய்யப் போகிறீர்கள்? என்பதற்கான நியாயங்களை மீள் ஒழுங்கு செய்யுங்கள். 

அடிப்படைய நியாயங்கள், முதன்மைப்படுத்த வேண்டிய நியாயங்கள் என்பன இஸ்லாம் கூறும் அடிப்படையான குடும்பப் பெறுமானங்களின் மீது எழ வேண்டியவையாகும். அவை உங்கள் முதல் தர நியாயங்களாக அமைகின்ற பொழுது, கிளை நியாயங்களாகவும் இரண்டாம் தர நியாயங்களாகவும் ஏனையவை அமைவதில் எந்தவிதமான தவறுமில்லை.

அதாவது எதிர்வினைகள், உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மனவெழுச்சிகள், உல்லாசத் தேடல்கள் இவையும் நீங்கள் ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்பதற்கான நியாயங்களாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் இவை அடிப்படை நியாயங்களாக அல்லது முதல்தர நியாயங்களாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து, கொஞ்ச நேரம் கடந்த பந்தியில் பேசிய ஒரு விடயத்திற்கு மீண்டும் வருவோம். ஒருவன் தான் திருணம் செய்யப் போகிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமும் ஏற்படுகிறது. பயமும் ஏற்படுகிறது.

சந்தோஷத்தைப் பொறுத்தவரையில் நாம் மேலே பேசிய திருமணம் செய்வதற்கான நியாயங்களை மையப்படுத்திப் பார்க்கின்ற பொழுது, அன்பு, காதல், இன்பம், நன்மை, அல்லாஹ்வின் திருப்தி போன்றவற்றால் ஏற்பட முடியும். அதேபோல் பயத்தைப் பொறுத்தவரை புதிது, பொறுப்பு, கஷ்டம், இயலாமை, அல்லாஹ்விடம் பதில் சொல்லுதல் போன்ற காரணங்களால் ஏற்பட முடியும். இந்த சந்தோஷங்களும் பயங்களும் நியாயமானவையே. 

இவை சமநிலையற்ற ஒரு மனநிலையைப் பிரதிபளிப்பவை அல்ல. ஆனால் அந்த சந்தோசம் என்பது, பயத்திற்கான காரணங்களின் கனதியைப் புரிந்து கொள்ளாததாகக் காணப்படக் கூடாது. அல்லது பயங்களின் காரணங்களிலிருந்து விரண்டு ஓடுவதாகக் காணப்படக்கூடாது.
அதாவது திருமணவாழ்வு என்பது ஓரே இன்பமயம் என்ற பிரம்மையாக அமைந்து விடக் கூடாது. மாற்றமாக பயங்களின் காரணங்களை மிகச்சரியாகப் புரிந்து கொண்டதாகவும், அவற்றை எதிர்கொள்ளும் தயார்நிலை கொண்டதாகவும் காணப்படல் வேண்டும். அதேபோல் சந்தோசம் என்பது, தனித்து இன்பத் தேடலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துவிடக்கூடாது. மாற்றமாக நன்மைத் தேடலை அடிப்படையாகக் கொண்டதாகவும் அது அமைய வேண்டும். 

அடுத்து பயம் என்பது, சந்தோசத்திற்கான காரணங்களை மறுதலிப்பதாக அமைந்து விடக்கூடாது. அல்லது வாழ்வை விட்டு ஒதுங்கி விடுவதாக அமைந்து விடக்கூடாது. மாற்றமாக வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதைப் புரிந்து கொண்டதாகவும், பொறுப்பை சுமப்பதில் தான் குடும்ப வாழ்வின் இன்பமே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதாகவுமே காணப்படல் வேண்டும்.

இது நாம் ஆரம்பத்தில் பேசியது போன்று சந்தோஷத்தையும், பயத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்குரிய இடங்களாகும். அடுத்து திருமணம் பற்றிய எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒழுங்குபடுத்துவது எவ்வாறு? என்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, எனவே, இளைஞர்களே, திருமணம் பற்றிய உங்கள் எண்ணங்களை, பார்வைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதை இலகுபடுத்துவதற்காக நீங்கள் மனங்கொள்ள வேண்டிய சில விடயங்களை இங்கே முன்வைக்கிறோம்.
 
1. உங்களது எதிர்காலத் திட்டத்தில், உங்களது திருமணமும் ஒரு பகுதியாகக் காணப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதாவது உங்களது வாழ்வின் பெரிய இலக்கு நோக்கிய பயணத்தில் திருமணம் என்பது ஒரு கட்டம். அந்தக் கட்டத்தையும் மிகச் சரியாக அடைந்து கொள்ள வேண்டும்.

2. திருமணம் எனும் நிகழ்ச்சி உங்களது இறுதி இலக்கல்ல. மாற்றமாக திருமணத்தின் விளைவுகளே உங்களது இலக்காக இருக்க வேண்டும். எனவே விளைவுகளை மிகச் சரியாக அடைந்து கொள்வதற்குரிய திருமணமே உங்களுக்குத் தேவை.

3. உங்களது வாழ்வில் நீங்கள் அடைந்து கொள்ள நினைக்கும் வெற்றித் தொடரின் ஒரு பகுதியாக திருமணம் காணப்படல் வேண்டும். அதாவது, உங்களது வாழ்வில் ஏனைய எல்லாவற்றிலும் வெற்றி காண்பது போல் திருமண வாழ்வும் வெற்றிகரமாய் அமைய வேண்டும். தொழிலில் வெற்றி பெற்று குடும்ப வாழ்வில் தோற்றவர்களாய், தஃவாவில் வெற்றி பெற்று குடும்ப வாழ்வில் தோற்றவர்களாய் நீங்கள் இருக்கக் கூடாது.

4. அறிந்து கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் கொடுக்கின்ற பரிமாணத்திற்கு ஏற்பவே நீங்கள் அவளிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும். ஏனெனில், குடும்ப வாழ்வு என்பது பரஸ்பரபக் பரிமாற்றமாகும். அதனைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் “ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கலாமே, நீ அவளுடன் விளையாடலாம், அவள் உன்னுடன் விளையாடுவாள்.” இறுதியாக, ஒரு இளைஞனைப் பார்த்து நீங்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே மேல் என்று சொல்வோம், அவன் யாராக இருக்கும், என்று ஆச்சரியப்படுகிறீர்களா? 

இந்தக் கதையைக் கேளுங்கள் ஒரு தடவை, ஒரு இளைஞன் மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தான். முளைத்த நாளிலிருந்து இடம் மாறாது ஒரே இடத்தில் நின்றிருக்கும் அந்த மரங்களைப் பார்க்கிறான். அவை சுயமாக எதனையும் செய்யாமல் பிறரில் தங்கியிருக்கின்ற தோற்றமே அவனது மனக்கண் முன்னே பெரிதாக எழுந்து நிற்கின்றது. அவன் தன்னோடு பேசிக் கொள்ள ஆரம்பிக்கிறான். திருமண வாழ்வு என்பது ஒரு பெரும் போராட்டம். பெண்களை இந்த மரங்கள் போல் வைத்திருந்தால்தான் அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். எனவே, 

• அவளை அதிகம் படிக்க வைக்கக் கூடாது. படிப்பு அவளுக்கு சுயமாய் இயங்கும் சக்தியைக் கொடுத்துவிடும்.

• ஒருபோதும் அவளை தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. அவளுக்கு தனி வருமானம் இருந்தால் எனது கட்டுப்பாட்டை விட்டு வெளியே சென்று விடுவாள். எனது தேவை அவளுக்கு இல்லாது போய்விடும்.

• இரண்டாம் திருமணம் செய்வேன் என்ற அச்சுறுத்தல் என்றும் அவளுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். இரவு பகலாக தூக்கத்திலும் சரி, விழிப்பிலும் சரி அவள் கழுத்து மீதான கத்தியாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு முன்னால் மண்டியிட்டிருப்பாள்.

• இல்லை, முடியாது, கூடாது என்ற வார்த்தைகள்தான் எனது ஆயுதம். அவள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான வார்த்தைகள், அவளை எனது கூண்டில் அடைத்து வைப்பதற்கான வார்த்தைகள்.

• பிரயாணங்கள், இரவுக் கொண்டாட்டங்கள், சுதந்திரம், பணம், தீர்மானம் என அனைத்துமே எனக்குரியவை மட்டும்தான். அவளுக்கு அவற்றில் எதுவும் கிடையாது. எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்காகக் காத்திருப்பது மட்டும்தான்; அவளது வேலை. தொடர்ந்தும் தனது மனதிற்குள்ளே சொல்லிக் கொள்கிறான். மரங்களையும் பெண்களையும் காரணத்துடன்தான் ஒப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்கள் மரங்கள் போல் ஆணுக்கு முன்னால் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள் விரும்பி அசைத்தாலே ஒழிய அவர்கள் அசையக் கூடாது. 

திடீரென தோட்டத்து மதில் மீதிருந்து பெரிய பூனையொன்று பாய்ந்து ஓடியது. அந்த இளைஞன் பதறிப் போய் எழுந்து நின்றான். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தில் நூறு முறை அடித்துக் கொண்டது. மீண்டும் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் “திருமண வாழ்க்கை ஒரு பெரிய போராட்டம் என்று நான் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை” என்றான்.

இந்தக் கதையில் வரும் இளைஞனுடைய சிந்தனையைப் போன்று பெண்களைப் பற்றியும் திருமணம் பற்றியும் ஒருவனுடைய சிந்தனை காணப்படும் எனின், அவனைப் பார்த்துத்தான் சொல்கிறோம் தயவுசெய்து நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இவ்வளவு காலமும் வாழ்ந்தது போல் தனியாக வாழ்வதே நல்லது, என்போம்.

அஷ் ஷேக் அக்ரம் சமத்      
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.